தேனியில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் 2–வது நாளாக சாலை மறியல்

தேனியில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2–வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-09-08 23:15 GMT

தேனி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலம் 8–வது ஊதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணம் 20 சதவீதம் உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், 2–வது நாளாக நேற்று காலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக தேனி பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் சாலை பிரிவு அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். அவர்களிடம் இடைக்கால தடை உத்தரவு குறித்து போலீசார் தெரிவித்தனர்.

சுமார் அரை மணி நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஊர்வலமாக சென்று மறியல் செய்யாமல் ஆர்ப்பாட்டம் செய்து கொள்வதாக கூறினர். பின்னர், அவர்கள் சாலையை மறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையில் மையத் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், ஒரு பகுதி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால், வாகனங்கள் மற்றொரு பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது. அந்த பகுதியில் செல்வதற்கு போதிய இட வசதி இல்லாததால் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றன. இதனால் தேனி நேரு சிலை சிக்னல் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேர போராட்டத்தை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

2–வது நாளாக நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மொத்தம் 2,973 பேர் பங்கேற்றனர். இதில் 6,540 ஆசிரியர்களில் 1,382 பேரும், 5,517 அரசு ஊழியர்களில் 1,591 பேரும் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால், 2–வது நாளாக அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதற்கு முன்பாக, ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகளிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சேது தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளதால், ஊர்வலம் மற்றும் சாலை மறியலுக்கு அனுமதியில்லை என்றும், மீறி ஊர்வலம் சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக போலீஸ் துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், மாநில மையத்தின் ஒப்புதல் பெறாமல் நோட்டீசை பெற்றுக்கொள்ள முடியாது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். சுமார், அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், நோட்டீஸ் வாங்க மறுத்ததால், தேனி அல்லிநகரம் பழைய போலீஸ் நிலையம் அருகே உள்ள ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு அலுவலகத்தில் இந்த நோட்டீசை போலீசார் ஒட்டினர்.

தேனியில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் 2–வது நாளாக நேற்று நடத்திய போராட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்காமல், எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு அளித்ததை கண்டித்தும், கேலி செய்யும் விதத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்