கோர்ட்டு உத்தரவை மீறி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 2–வது நாளாக சாலை மறியல்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கோர்ட்டு உத்தரவை மீறி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நேற்று 2–வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-08 23:15 GMT

திருப்பூர்,

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ அரசு ஊழியர்கள் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை மீறி ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 2–வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் மணியன் சிறப்புரையாற்றினார். மேலும், பலர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

போராட்டத்தின் போது கோரிக்கைகள் குறித்து கோ‌ஷமிட்டனர். ஒரு சில சத்துணவு அமைப்பாளர்கள் ஒப்பாரி வைத்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சில ஊழியர்கள் குடை பிடித்தபடி போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை கமி‌ஷனர் கயல்விழி பாராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் திருப்பூர்–பல்லடம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

2–வது நாளாக நடைபெற்ற போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் பலர் பல்வேறு தேவைகளுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களுக்கு சென்றனர். ஆனால் அங்கு அரசு ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மேலும், போராட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டதால் திருப்பூரில் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.

தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் விட வந்த பெற்றோர் வகுப்பு ஆசிரியர்கள் இல்லாததால் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். இதனால் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. சில பள்ளிகளில் பணிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பில் அமர வைத்து பாடம் நடத்தினார்கள்.

இது குறித்து தொடக்கக்கல்வி அதிகாரி கனகமணியிடம் கேட்ட போது ‘‘தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 4 ஆயிரத்து 638 ஆசிரியர்களில் 59 சதவீதம் ஆசிரியர்கள், அதாவது 2 ஆயிரத்து 737 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மீதமுள்ள ஆசிரியர்கள் பணியில் இருந்ததால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை’’ என்றார். அது போல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 3 ஆயிரத்து 731 ஆசிரியர்களில் 25 சதவீதம் பேர் அதாவது 940 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. இதனால் எந்த பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் 2–வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் இருந்தும் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் அவினாசி கந்தம்பாளையத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் சுமதி (வயது 38) என்பவரும் பங்கேற்றார்.

சாலை மறியல் போராட்டத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுமதி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அங்கு 108 ஆம்புலன்சு வாகனம் வரவழைக்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்