கவுந்தப்பாடி அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு

கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது, கவுந்தப்பாடி அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தார்கள்.

Update: 2017-09-08 23:00 GMT

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மகாத்மாபுரத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். அவருடைய மகன் பிரபு (வயது 28). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். திருப்பூர் ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் நம்பிராஜன். இவருடைய மகன் கோகுல் என்கிற கோகுலகிருஷ்ணன் (24). அந்த பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார்.

கவுந்தப்பாடி அருகே உள்ள புதூர் வள்ளலார் நகரில் பொன்பரத்தி அம்மன் கோவில் உள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரின் குல தெய்வமான இந்த கோவிலின் ஆண்டுவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தம் எடுத்துவர முடிவு செய்தார்கள். அதன்படி நேற்று காலை 50–க்கும் மேற்பட்டோர் கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூரில் ஓடும் பவானி ஆற்றுக்கு சென்றார்கள். பிரபு, கோகுலகிருஷ்ணனும் தங்களுடைய பெற்றோருடன் தீர்த்தம் எடுக்க சென்றார்கள்.

பக்தர்கள் அனைவரும் ஆற்றில் புனிதநீராடி குடங்களில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு கரையில் உள்ள மகாலீசுவரர் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு கோவிலின் முன்னால் உள்ள விநாயகர் சன்னதியில் குடங்களை வைத்து பூஜை நடத்தினார்கள்.

பிரபு, கோகுலகிருஷ்ணன் இருவர் மட்டும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது ஆழமான பகுதிக்கு அவர்கள் சென்றபோது, திடீரென தண்ணீரில் மூழ்கினார்கள். அவர்கள் இருவருக்குமே நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. அதனால் மேலே வரமுடியாமல் மூழ்கிவிட்டார்கள். கரையில் நின்றவர்கள் இதைப்பார்த்து ஓடிவந்து தண்ணீரில் குதித்து இருவரையும் மீட்டு மேலே கொண்டுவந்தார்கள்.

பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு இருவரையும் கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுபற்றி கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த பிரபு, கோகுலகிருஷ்ணன் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது, 2 வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்