தூத்துக்குடியில், 14 ஆண்டுகளுக்கு பிறகு சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்

தூத்துக்குடியில், 14 ஆண்டுகளுக்கு பிறகு சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.

Update: 2017-09-08 21:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், 14 ஆண்டுகளுக்கு பிறகு சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரராமேசுவரர் கோவில்

தூத்துக்குடி நகரில் பிரசித்தி பெற்ற சங்கரராமேசுவரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2003–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 6–ந் தேதி முதல் 100 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டு இருந்த உத்தமபட்ச யாகசாலையில் பூஜைகள் நடந்து வந்தன.

மகா கும்பாபிஷேகம்

நேற்று காலை 3.30 மணிக்கு 4–ம் கால யாகசாலை நடந்தது. தொடர்ந்து நாடிசந்தானம், சபர்சாகுதி, காலை 5.30 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ராதான, கடம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு சங்கரராமேசுவரர், பாகம்பிரியாள், பரிவாரமூர்த்திகள் விமானங்களுக்கு சிறப்புபூஜைகள் நடந்தன.

காலை 7.15 மணிக்கு கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது கும்பாபிஷேக நீர் ஸ்பிரேயர் கருவி மூலம் தெளிக்கப்பட்டது.

உள்ளூர் விடுமுறை

கும்பாபிஷேகத்தை காண நேற்று காலை 4 மணி முதல் பக்தர்கள் கோவிலில் திரண்டனர். ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்த போது, கருடன் கோவிலின் மீது சுற்றி வட்டமடித்தது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசத்தால் “சிவாய நமக“, “சிவாய நமக“ என கோ‌ஷங்கள் எழுப்பினர். பக்தர்களின் வசதிக்காக கும்பாபிஷேகத்தை காண 8 இடங்களில் டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்தன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் அருகே இருந்த உயரமான கட்டிடங்களில் இருந்து பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

அன்னதானம்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தூத்துக்குடி டி.ஏ.திருமண மண்டபம், எஸ்.ஏ.வி. பள்ளிக்கூடம், சைவவேளாளர் மண்டபம் ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சுவாமி– அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, சசிகலா புஷ்பா எம்.பி., கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், திருப்பணிக்குழு தலைவர் ராஜாசங்கரலிங்கம், செயலாளர் விநாயகமூர்த்தி, கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் சிவாச்சாரியார்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்