மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல்

மாவட்டம் முழுவதும் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-08 00:30 GMT

வேலூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாணை வழங்க வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து மத்திய அரசின் புதிய ஊதியத் குழு மாற்றத்தை 1–1–2016 முதல் செயல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ– ஜியோவினர் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி வேலூர் மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டம் நடந்தது. வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட தலைவர் சரவணராஜ், செயலாளர் ராஜாமணி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின மாவட்ட செயலாளர் எல்.மணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்திற்காக காலை முதலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் நிலையம் முன்பு திரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் சாலையில் அமர்ந்தும், படுத்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300 பேரை போலீசார் கைது செய்தனர். மறியலால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் நடந்தது. மாவட்டம் முழுவதும் சாலைமறியலில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளிகள் அனைத்தும் இயங்கியது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் கூறுகையில், 78 சதவீத ஆசிரியர்கள் வருகையினால் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கியது என்றார்.

தொடக்க கல்வி அலுவலர் குணசேகரனிடம் கேட்டபோது, தொடக்க கல்வி ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்றாலும் பள்ளிகளுக்கு 64 சதவீத ஆசிரியர்கள் வந்திருந்தனர். எனவே பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்