ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் அரிப்பு; ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டதால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2017-09-08 00:13 GMT

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

பலத்த மழையால், ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி அரிப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த ஜல்லிக்கற்கள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் தண்டவாளம் சேதமடைந்தது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதம் உடனடியாக கண்டறியப் பட்டதால், ரெயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம் மார்க்கமாக சென்னை செல்லும் பல ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பழனியில் இருந்து சென்னை செல்லும் பழனி எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் சென்னை மெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலும், ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன.

மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் சென்னை மெயில், ஆலப்புழையில் இருந்த சென்னை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில், மைசூருவில் இருந்த சென்னை செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயில், கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து சேதமடைந்த தண்டவாளத்தை சரி செய்யும் பணியில், நள்ளிரவு 1 மணி முதல் நேற்று அதிகாலை 3–15 மணி வரை ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். தண்டவாளம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டன. இதையடுத்து 3–30 மணிக்கு மேல் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

அப்போது ரெயில்கள் அனைத்தும் 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. இதனால் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

தண்டவாளங்கள் முழுவதும் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று பகல் 2 மணிக்கு மேல் ரெயில்கள் வழக்கமான வேகத்தில் சென்றன.

மேலும் செய்திகள்