எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கைது கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு

மங்களூருவில் தடையை மீறி மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்ற எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2017-09-07 23:30 GMT

மங்களூரு,

மங்களூருவில் தடையை மீறி மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்ற எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தொண்டர்கள் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சஜிபமுன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத் மடிவாளா(வயது 34). ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

சரத் மடிவாளா கொலையில் தொடர்புடையதாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் அமைப்பின் தலைவரான கலீம் உல்லா உள்பட சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சரத் மடிவாளா கொலையில் தொடர்புடைய முஸ்லிம் அமைப்பின் தலைவர் இருந்து வரும் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மங்களூருவில் 7–ந் தேதி(அதாவது நேற்று) “மங்களூரு சலோ“ என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த போவதாக பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது. இந்த நிலையில் கர்நாடக உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டியை நேரில் சந்தித்த பா.ஜனதா தலைவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்குவது குறித்து அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தான் முடிவு செய்வார்கள் என்று மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார். இதுகுறித்து மங்களூரு போலீஸ் கமி‌ஷனர் சுரேசிடம் கேட்ட போது அவர் மங்களூருவில் அமைதியை நிலைநாட்டும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மங்களூருவில் மோட்டார் சைக்கிளில் பேரணியில் கலந்து கொள்ள சில மாவட்டங்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பா.ஜனதாவினரை அந்தந்த மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இந்த நிலையில் நேற்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் மங்களூருவில் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த பா.ஜனதாவினர் முடிவு செய்தார்கள்.

அதன்படி மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ள கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, முன்னாள் துணை முதல்–மந்திரி ஆர்.அசோக், எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேல்–சபை தலைவர் ஈசுவரப்பா, சிக்கமகளூரு– உடுப்பி தொகுதி எம்.பி. ஷோபா, தட்சிண கன்னடா மாவட்ட எம்.பி. நளின்குமார் கட்டீல் உள்பட தலைவர்கள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் மங்களூருவுக்கு வருகை தந்தார்கள். மங்களூரு டவுன் ஜோதி சர்க்கிளில் இருந்து நேரு மைதானம் வரை எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்ல முடிவு செய்தார்கள். இதனால் ஜோதி சர்க்கிள் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா கூறும்போது, நாங்கள் அமைதியான முறையில் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேரணிக்கு புறப்பட்டு வந்த பா.ஜனதா தொண்டர்களை போலீசார் அந்தந்த மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இன்று(நேற்று) மங்களூருவில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் வந்து உள்ளார்கள். முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான அரசு ஆட்சியமைத்த பின்னர் இதுவரை கர்நாடகத்தில் 20–க்கும் மேற்பட்ட இந்து சங்க பிரமுகர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த கொலைகளை தடுத்து நிறுத்த அரசு தவறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.

ஷோபா எம்.பி. அளித்த பேட்டியில், நாங்கள் அமைதியான முறையில் பேரணி செல்ல அரசிடம் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் போராட அனைவருக்கும் உரிமை உண்டு. எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

இதனை தொடர்ந்து எடியூரப்பா, ஈசுவரப்பா, ஷோபா, அசோக் உள்பட பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் ஜோதி சர்க்கிளில் இருந்து நேரு மைதானம் வரை மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக புறப்பட்ட முயன்றார்கள்.

அப்போது போலீசார் எடியூரப்பா உள்பட தொண்டர்களிடம் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி இல்லை, நீங்கள் பேரணியாக செல்ல கூடாது என்று தெரிவித்தனர். ஆனாலும் எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்களும், தொண்டர்களும் தடையை மீறி மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்றார்கள். இதனை தடுத்து நிறுத்திய போலீசார் எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்களை கைது செய்தார்கள். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பஸ்சில் எடியூரப்பா உள்பட தலைவர்களை போலீசார் ஏற்றினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் போலீசாருக்கும், பா.ஜனதா தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒருவிதமான பதற்றமான சூழ்நிலை நிலவியது. தள்ளுமுள்ளுவின் போது தவறி கீழே விழுந்ததில் 2 போலீசாரும், 3 பா.ஜனதா தொண்டர்களும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜனதா தொண்டர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியை விட்டுவிட்டு, நடைபயணமாக தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டார்கள்.

மேலும் செய்திகள்