மண்ணின் வளத்தை பெருக்க கால்நடைகள் அவசியம் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு

மண்ணின் வளத்தை பெருக்க கால்நடைகள் அவசியம் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.

Update: 2017-09-08 00:00 GMT

புதுச்சேரி,

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடந்த 3–ந்தேதி முதல் நதிகளை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நதிகளை மீட்போம் என்ற பெயரில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தாமே வாகனம் ஓட்டி இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் புதுச்சேரி வந்தார்.

நேற்று காலை கடற்கரை காந்தி திடலில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:–

நதிகளை மீட்போம் என்ற அட்டையை நீங்கள் அனைவரும் அடுத்த 30 நாட்களுக்கு உங்கள் கைகளில் வைத்திருக்கவேண்டும். இதுவரை நம் நாட்டின் மாநிலங்கள் நதிகளுக்காக இணைந்ததில்லை. ஆனால் இப்போது அனைத்து முதல்வர்களும் இந்த இயக்கத்திற்கு தாங்கள் ஒத்துழைப்பை நல்கியிருப்பது, நதிகளுக்காக அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைவது இதுவே முதல் முறை.

இது நம் நாட்டின் பெருமைக்குரிய வி‌ஷயம் நமக்குள் பல பிரிவினைகள் இருப்பினும், நாம் முக்கியமான வி‌ஷயங்களில் ஒன்றிணைகிறோம். இந்த இயக்கம் வெற்றிபெற குறைந்தது 20 வருடங்கள் ஆகலாம். இது தேர்தலில் ஜெயிக்கும் திட்டம் அல்ல. இது தேசத்தின் நீண்ட கால நலனுக்கான திட்டம். தேச நலனுக்காக நமக்கு கிடைக்கும் இலவசங்களை தாண்டி நீண்ட கால நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பதை உணர்த்த வேண்டும்.

நதிகள் பனிப்பாறையில் இருந்து உருவாவது, காடுகளில் இருந்து உருவாவது என 2 வகைப்படும். நாம் நாட்டில் மழைப்பொழிவு தோராயமாக 45 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது. இதனை ஆண்டுதோறும் நதிகளாக ஓடச்செய்ய நதிகளின் கரைகளில் மரங்களை நடவேண்டும். அவ்வாறு மரங்களை நடுவதன் மூலம் நதிகளை மீட்க முடியும். அரசாங்க நிலத்தில் மரங்களை நட்டு காடுகளை உருவாக்க வேண்டும். விவசாய நிலங்களில் மரங்களை வளர்க்கவேண்டும். இதனால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.

புதுச்சேரி பிரெஞ்சு தேசத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. இதை இந்தியாவிற்கு ஒரு மாதிரி மாநிலமாக உருவாக்கவேண்டும். நம் மண் வளமாக இருந்தால் மட்டுமே நாம் அதில் விவசாயம் செய்ய முடியும். நம் மண்ணின் வளம் குறைந்துவிட்டது. விவசாயத்திற்கு ஏற்றதாகவும் இல்லை. நமது விவசாயிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அவர்களது சந்ததியினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகின்றனர். வெறும் வேளாண் பட்டதாரிகளை வைத்துக்கொண்டு நாம் விவசாயம் செய்ய முடியாது. நம் மண்ணின் வளத்தை பெருக்க வேண்டுமெனில் மரக்கழிவுகள் மற்றும் கால்நடைகள் இருப்பது அவசியம்.

இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.

இந்த கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

இப்போது தண்ணீர் அதிகமாக வீணடிக்கப்படுகிறது. நீர்நிலைகளை காப்பதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு வரவேண்டும். வற்றாத நதிகள் பல இப்போது வற்றி வருகிறது. நமது மாநில மக்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமியுங்கள் என்பதுதான். புதுவை மாநிலத்தை தரமான மாநிலமாக உருவாக்க ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வளமேம்பாட்டு இயக்குனர் விக்ரமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்