காவிரி நதிநீர் பிரச்சினை: கர்நாடகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது
காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்று தேவேகவுடா கூறினார்.
ஹாசன்,
முன்னாள் பிரதமரும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான தேவேகவுடா நேற்று ஹாசன் தாலுகாவில் உள்ள கொரூரில் அணையை பார்வையிட்டார். மேலும் அணையின் நீர் இருப்பு விவரம் குறித்து அணையின் என்ஜினீயரிடம் கேட்டு அறிந்து கொண்டார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு தேவேகவுடா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–ஒவ்வொரு வருடமும் ஹேமாவதி அணையில் இருந்து கே.ஆர்.எஸ். அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அங்கு இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் விடப்படுகிறது. இதனால் ஹேமாவதி அணையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. கர்நாடகம்– தமிழகம் இடையே பல ஆண்டுகளாக காவிரி பிரச்சினை உள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
ஆனால் ஒவ்வொரு முறையும், கர்நாடகத்திற்கு பாதகமாக தான் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகின்றன. காவிரி பிரச்சினையில் கர்நாடகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தி, துமகூரு மாவட்டத்தில் ஒரு விவசாயி கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.மேலும் சில விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட வேண்டும்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இது கண்டிக்கத்தக்கது. நக்சலைட்டுகள் திருந்தி வாழ்வதற்காகவும், அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கவும் அவர் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.அவரின் கொலைக்கு உலக அளவில் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது ஹாசன் மாவட்ட ஜனதாதளம்(எஸ்) தலைவர் நிங்கேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.