தசரா விழாவை தொடங்கி வைக்க வருமாறு வேண்டி கவிஞர் நிஷார் அகமதுவுக்கு முறைப்படி அழைப்பிதழ்

தசரா விழாவை தொடங்கி வைக்க வரும்படி பெங்களூருவில் கவிஞர் நிஷார் அகமதுவுக்கு முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

Update: 2017-09-07 23:08 GMT

மைசூரு,

தசரா விழாவை தொடங்கி வைக்க வரும்படி பெங்களூருவில் கவிஞர் நிஷார் அகமதுவுக்கு முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அழைப்பிதழை தசரா விழா தலைமை அதிகாரியும், மைசூரு மாவட்ட கலெக்டருமான ரன்தீப் தலைமையிலான விழாக்குழுவினர் நேரில் வழங்கினர்.

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 21–ந் தேதி தொடங்கி 30–ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் 30–ந் தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீசுவரி அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கி வைக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் விழா தொடங்கப்பட உள்ளது. விழாவை கவிஞர் நிஷார் அகமது தொடங்கி வைக்க உள்ளார். அதற்காக அவருக்கு முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதன்பேரில் மைசூருவில் இருந்து மாவட்ட கலெக்டரும், தசரா விழா தலைமை அதிகாரியுமான ரன்தீப் தலைமையில், மைசூரு மாநகர மேயர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள், தசரா குழுவினர் நேற்று பெங்களூருவில் உள்ள கவிஞர் நிஷார் அகமதுவின் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவரை சந்தித்து தசரா விழாவை தொடங்கி வைக்க வருமாறு வேண்டி முறைப்படி அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர் மைசூருவுக்கு வந்து தசரா விழாவை தொடங்கி வைப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து கலெக்டர் ரன்தீப் தலைமையிலான குழுவினர் அனைவரும் மைசூருவுக்கு புறப்பட்டு சென்றனர்.

மைசூருவை சென்றடைந்த மாவட்ட கலெக்டர் ரன்தீப் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க வருமாறு கவிஞர் நிஷார் அகமதுவுக்கு முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு தசரா விழாவுக்காக 1,000 கோல்டு கார்டுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்டின் விலையும் ரூ.3 ஆயிரத்து 855 ஆகும்.

இந்த கார்டை வாங்குபவர், அதை பயன்படுத்தி விழா நாட்களில், விழா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் சென்று கண்டுகளிக்கலாம். ஒரு கார்டை பயன்படுத்தி 2 பேர் செல்லலாம். இந்த கோல்டு கார்டுகள் மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகம், சுற்றுலா துறை அலுவலகம், போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம், அரண்மனை நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே மைசூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி சிவசங்கர், தசரா விழா தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மைசூரு தசரா விழா துணை கமிட்டி குழு நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது கன்னட மொழி, கலாசாரம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை, கல்வி உள்பட பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு இடம்பெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற இருக்கிறது.

அதன்படி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா ஒரு அலங்கார வாகனம் என 30 வாகனங்கள் ஊர்வலத்தில் இடம்பெற இருக்கிறது. மேலும் மாநில அரசு சார்பில் ஒரு வாகனமும், கன்னட கலாசாரத்துறை சார்பில் ஒரு வாகனமும், சமூக நலத்துறை சார்பில் ஒரு வாகனமும் மற்றும் செய்தித்துறை சார்பில் ஒரு வாகனமும் இடம்பெற இருக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மைசூரு பண்டிபாளையா ஏ.பி.எம்.சி. மார்க்கெட் வளாகத்தில் அலங்கார வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அவைகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்