முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே மீது வழக்குப்பதிவு

அஞ்சலி தமானியாவை அவதூறாக பேசியதாக முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-09-07 22:13 GMT

மும்பை,

மராட்டிய அரசில் வருவாய்த்துறை மந்திரியாக இருந்த பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் பேசியது, நிலமோசடி செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளால் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

ஏக்நாத் கட்சே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஆண்டு போராட்டங்களில் ஈடுபட்டவர் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர் அஞ்சலி தமானியா.

இந்தநிலையில், ஜல்காவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய முன்னாள் மந்திர் ஏக்நாத் கட்சே அஞ்சலி தமானியா குறித்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏக்நாத் கட்சேவை பெண்களுக்கு எதிராக பேசிய குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதி இருப்பதாக அஞ்சலி தமானியா கூறினார்.

இந்தநிலையில், அவர் ஏக்நாத் கட்சேவுக்கு எதிராக வகோலா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரை ஏற்று போலீசார் ஏக்நாத் கட்சே மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்