‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தர்ணா

ஆவுடையார்கோவில் மற்றும் விராலிமலை அருகே ‘நீட்‘ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-07 23:00 GMT
ஆவுடையார்கோவில்,

‘நீட்‘ தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டித்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உருவப்படத்தை கையில் ஏந்தி, அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மற்றும் கல்லூரிக்கு தண்ணீர் வசதி கேட்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆவுடையார்கோவில் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் விராலிமலை அருகே பூதகுடி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கல்லூரி முதல்வர் குகராஜா மற்றும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்