இளம் பெண்ணின் வீட்டுக்குள் குடிபோதையில் புகுந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

கடலூரில், இளம் பெண்ணின் வீட்டுக்குள் குடிபோதையில் புகுந்த கிள்ளை போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்தும், துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் வாகனங்களை திரும்ப பெற்றும் சூப்பிரண்டு விஜயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2017-09-08 01:30 GMT
கடலூர்,

சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் விஜயவர்மன். கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்து ஆல்பேட்டையில் உள்ள ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தார்.

அப்போது அந்த வீட்டில் இருந்த 20 வயது இளம் பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டதும் தெருவில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் ஓடி வந்து விஜயவர்மனுக்கு தர்ம அடி கொடுத்தனர். உடன் அருகில் உள்ள சோதனைச்சாவடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகே அப்பகுதி மக்களுக்கு அவர் போலீஸ்காரர் என தெரியவந்தது. விசாரணைக்கு வந்த போலீசாரும் விஜயவர்மனுக்கு ஆதரவாக பேசியதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது பற்றி அந்த பெண்ணின் தாய் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடிபோதையில் இளம் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த விஜயவர்மனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.

மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரிதமாக விசாரணை எடுக்காததாலும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தாலும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் திரும்ப பெற்று நடவடிக்கை எடுத்தார்.

போலீஸ்காரர் விஜயவர்மனின் இந்த நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சுப்பிரமணியனை கடலூர் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்தும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்