ஈசுவரப்பாவுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
பா.ஜனதா மூத்த தலைவரும், கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பாவுக்கு செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார்.
சிவமொக்கா,
பா.ஜனதா மூத்த தலைவரும், கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பாவுக்கு செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பா தற்போது சிவமொக்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஈசுவரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்துவிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஈசுவரப்பா உடனடியாக அந்த மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண் யாருடையது என்று விசாரித்தார். ஆனால் அது யாருடையது என்று தெரியவில்லை.
இதையடுத்து நேற்று காலையில் ஈசுவரப்பா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரேவை சந்தித்து தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்திருப்பதை தெரிவித்து புகார் மனு அளித்தார். மேலும் தனக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்தார்.புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே, விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி சைபர் கிரைம் போலீசாருக்கும் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசிய எண்ணை கைப்பற்றி அதன்மூலம் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் அந்த மர்ம நபரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். ஈசுவரப்பாவுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.