மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-06 23:27 GMT

செங்கல்பட்டு,

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகே மருத்துவ மாணவ, மாணவிகள் 100–க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் செங்கல்பட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில், மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு பார் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

கேளம்பாக்கம் அடுத்த படூர் இந்துஸ்தான் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ–மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பழைய மாமல்லபுரம் சாலை கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்