ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டத்தில் துயரம் நீர்நிலைகளில் மூழ்கி 15 பேர் பலி
ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஆனந்த சதுர்த்தி தினமான நேற்று நீர்நிலைகளுக்கு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இந்த கொண்டாட்டத்தின் போது பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவங்களும் நிகழ்ந்து விட்டன.அவுரங்காபாத்தில் உள்ள சிவானி ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தன. அப்போது சிலைகளை கரைப்பதற்காக ஏரியில் இறங்கிய 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
புனேயில் 4 பேர் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி இறந்தார்கள். இதேபோல ஜல்காவில் 2 பேர், நாசிக்கில் 2 பேர், அகமத்நகர், சத்தாரா, பர்பானி, பீட் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 15 பேர் ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நீர்நிலைகளில் மூழ்கி பலியானார்கள்.ஆனந்த் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் துயரத்தை ஏற்படுத்தி உள்ளன.