நிவாரணம் வழங்கக்கோரி விசைப்படகு உரிமையாளர்கள் கடலில் இறங்கி போராட்டம்

நிவாரணம் வழங்கக்கோரி விசைப்படகு உரிமையாளர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-06 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துவாரம் தூர்வாரும் பணி கடந்த 8 மாதங்களாக நடக்கிறது. இந்த பணியின்போது சரிவர மணல் அள்ளப்படவில்லை. இதனால் படகுகள் கடலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் துறைமுக பகுதியில் தூர்வாரும் பணியை மேற்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்தால் ஏற்பட்ட இழப்புக்காக விசைப்படகு மீனவர்களுக்கு படகு ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அந்த நிவாரண நிதி இன்னும் வழங்கப்படவில்லை.

எனவே நிவாரணம் வழங்கக்கோரியும், தூர்வாரும் பணியை சரிவர மேற்கொள்ளக்கூறியும் விசைப்படகு மீனவர்கள் முகத்துவார பகுதியில் கடலில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் கவர்னர் கிரண்பெடி மற்றும் புதுவை அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைதொடர்ந்து போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர். மீனவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்