சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2017-09-07 02:30 GMT
சேலம்,

ஈரோட்டில் நேற்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். விழா முடிந்தவுடன் அவர் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு வந்தார். மாவட்ட எல்லையான சங்ககிரியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

இதையடுத்து சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது.

அதைத்தொடர்ந்து வீட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சின்னதம்பி, சித்ரா, சக்திவேல், வெற்றிவேல், செம்மலை, முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கட்சியின் நிலவரம் குறித்தும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், 12-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வருவது பற்றியும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சேலத்தில் இருந்து கார் மூலம் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் சேலம் வருகையையொட்டி மாநகர் முழுவதும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்