ஜவ்வரிசியில் கலப்படம் செய்ய வைத்திருந்த 85 மூட்டை மக்காச்சோள மாவு 2 லாரிகளுடன் பறிமுதல்

வெண்ணந்தூர் அருகே ஜவ்வரிசியில் கலப்படம் செய்ய வைத்திருந்த 85 மூட்டை மக்காச்சோள மாவு, 2 லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-09-06 23:00 GMT
வெண்ணந்தூர்,

சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனிடையில் தற்போது வடமாநிலத்தவர்கள் ஜவ்வரிசியை வாங்க மறுத்து வருகின்றனர். கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் 1 கிலோ 40 ரூபாய்க்கும், மக்காச்சோள மாவு 1 கிலோ 23 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் சேகோ ஆலையில் ஸ்டார்ச் உடன் மக்காச்சோள மாவை கலப்படம் செய்து அதிகளவில் ஏற்றுமதி செய்வதே இதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

இதனால் தற்போது ஜவ்வரிசி ஏற்றுமதி குறைந்து தொழிலே அழியும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

85 மூட்டை

இந்த நிலையில் வெண்ணந்தூர் அருகே உள்ள மசக்காளிபட்டியில் ஒரு சேகோ பேக்டரியில் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து நாமக்கல் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கவிக்குமார் மற்றும் நரசிம்மன், சிவசுப்ரமணி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று அந்த பேக்டரியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு ஏற்கனவே கலப்பதற்காக தொட்டியில் மக்காச்சோள மாவு கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 85 மூட்டை மக்காச்சோள மாவு மூட்டைகளுக்கு “சீல்“ வைக்கப்பட்டது. மேலும் “சீல்“ வைக்கப்பட்ட மூட்டைகளில் இருந்து பரிசோதனைக்கு மாவு எடுத்துக்கொள்ளப்பட்டது

கடும் நடவடிக்கை

இதை பரிசோதனை செய்த பின்பு கலப்படம் செய்தது தெரியவந்தால், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2 லாரிகளை சேகோ ஆலை உரிமையாளர் செங்கோட்டையன், அவரது மகன் சுரேஸ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், சேகோ ஆலைகளின் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஜவ்வரிசியில் ரசாயனம் மற்றும் மக்காச்சோள மாவு கலப்படம் செய்யும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது கலப்படம் செய்தது மற்ற சேகோ ஆலை உரிமையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்