கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கக்கோரி மாடுகளுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

மரக்காணம் அருகே எண்டியூர் கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கக்கோரி மாடுகளுடன் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-06 23:15 GMT
மரக்காணம்,

மரக்காணம் அருகே உள்ள எண்டியூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு எண்டியூர், மானூர், ஆத்தூர், கோவடி, கட்டளை, வட ஆலப்பாக்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனைக்கு டாக்டர்கள் சரிவர வருவதில்லை. மேலும், மருத்துவமனையில் போதுமான மருந்துகள் இருப்பு இல்லை என தெரிகிறது. இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், இது குறித்து எவ்வித பயனும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது பசுமாடுகளுடன் எண்டியூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் மாடுகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும், போதுமான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த மறியலால் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜோதிலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் களை சமாதானப்படுத்தினர். பின்னர், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்