‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது பெண் சப்–இன்ஸ்பெக்டரிடம் போலீஸ் உயர் அதிகாரி அத்துமீறல்

‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது பெண் சப்–இன்ஸ்பெக்டரிடம் அத்துமீறிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2017-09-06 23:45 GMT

கோவை,

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த 4–ந் தேதி கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதையும் மீறி, மாணவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

அப்போது அங்கு போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது. நெருக்கடியான இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கோவை மத்திய போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜெயராம், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது.

இதையடுத்து அந்த பெண் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜெயராம் ஆகியோரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.அமல்ராஜ் அழைத்து விசாரணை நடத்தினார்.

அப்போது அந்த பெண் சப்–இன்ஸ்பெக்டர், உதவி கமி‌ஷனர் வேண்டும் என்றே செய்யவில்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும்போது, அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசாரை தனது கையால் விலக்கிவிட்டு மாணவர்களை நோக்கி செல்லும்போது, அவருடைய கை தெரியாமல் தனது மீது பட்டுவிட்டதாகவும் கூறினார். உதவி கமி‌ஷனரும், தான் வேண்டும் என்றே செய்யவில்லை என்று கமி‌ஷனரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று கோவை போலீஸ் கமி‌ஷனர் ஏ.அமல்ராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

பொதுமக்கள் அதிகமாக கூடி இருக்கும் இடத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, பெண் சப்–இன்ஸ்பெக்டரிடம் அத்துமீறி இருக்கிறார் என்றால், போலீஸ் நிலையத்துக்குள் அவர் பெண் போலீசாரிடம் எப்படி நடந்து கொள்வார்?. இதனால் அவரிடம் புகார் கொடுக்க செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

போலீஸ் உயர் அதிகாரிகளின் அத்துமீறலை வெளியே கூற முடியாமல் பல பெண் போலீசார் தவித்து வருகிறார்கள். எனவே பெண் சப்–இன்ஸ்பெக்டரிடம் அத்துமீறிய போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.அமல்ராஜிடம் கேட்டபோது, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி துணை கமி‌ஷனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள உதவி கமி‌ஷனர் ஜெயராமை உடனடியாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு இன்று (வியாழக்கிழமை) காலையில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரிடம் தமிழ்நாடு காவல் துறை சட்டம் 17(பி)–ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்