லங்கடியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ராமநாதபுரம் விளையாட்டு வீரர் அரசின் உதவியை எதிர்நோக்கி பரிதவிப்பு

பாரம்பரிய லங்கடி விளையாட்டில் சர்வதேச போட்டிகளில் விளையாடி சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ராமநாதபுரம் விளையாட்டு வீரர் அரசின் உதவியை எதிர்நோக்கி பரிதவித்து வருகிறார்.

Update: 2017-09-07 00:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தேவேந்திரநகர் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல்– செல்வி ஆகியோரின் 2–வது மகன் தேவசித்தம்(வயது30). பொறியியல் படித்து விட்டு பன்னாட்டு நிறுவனத்தில் 7 ஆண்டுகள் வேலை பார்த்து வந்த இவர் தனது விளையாட்டு போட்டிக்காக வேலையை தொடர முடியாத நிலையில் பணியை விட்டு விட்டார். வாலிபர் தேவசித்தம் நொண்டியடித்து தொடும் பாரம்பரிய விளையாட்டான லங்கடி விளையாட்டில் சிறந்த வீரராவார். இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பில் தற்போது இந்த லங்கடி விளையாட்டு சேர்க்கப்பட்டு மாநில வாரியாக பள்ளிகளில் விளையாடப்பட்டு வருகிறது. அதிக சக்தி தேவைப்படும் இந்த விளையாட்டு நமது பாரம்பரிய விளையாட்டாக விளங்குகிறது.

இவர் இந்த லங்கடி விளையாட்டில் சிறந்து விளங்கியதால் தமிழக அணியின் கேப்டனாக பதவி பொறுப்பேற்று பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளார். இவ்வாறு இவர் தமிழக அணி கேப்டனாக இருந்து கடந்த 2012–ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும், 2013–ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்து தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

திருப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கேப்டன் தேவசித்தம் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இவரின் தலைமையின் கீழ் இந்திய லங்கடி அணி 2014–ம் ஆண்டு பூடானில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும், 2015–ம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதில், 2014–ம் ஆண்டு பூடானில் நடைபெற்ற போட்டியில் தேவசித்தம் சர்வதேச அளவில் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.

மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் லங்கடி போட்டியில் விளையாடி இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தேவசித்தத்தின் வாழ்வில் விதி விளையாடியது. தொடர்ந்து தனது சொந்த பணத்தில் விளையாடி வந்ததோடு, தமிழக அணி மற்றும் இந்திய அணிக்காக விளையாடியபோதும் தனக்காகவும், தன்னுடன் வரும் வீரர்கள் பலருக்காகவும் தனது சொந்த பணத்தை செலவு செய்து இந்த லங்கடி விளையாட்டினை வளர்ப்பதற்காகவும் முயன்று வந்துள்ளார். இதனால் இவரின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது. இதன்காரணமாக இவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை.

ஏற்கனவே, விளையாட்டிற்காக வேலையை விட்டுவிட்டதால் பொருளாதார ரீதியில் தேவசித்தம் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறார். பணவசதி இல்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு காட்மாண்டுவில் நடைபெற்ற போட்டியில் கலந்து காள்ள முடியாததால் தனது கேப்டன் பதவியை துணை கேப்டனுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

தொடர்ந்து கஷ்டமான நிலையில் வாழ்ந்து வந்த தேவசித்தத்திற்கு திருமணமாகி மனைவி ஜெனியை பொறியியல் படிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளது. இதனால் கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தனது நிலையை எடுத்துக்கூறி அரசின் உதவியை பெற கடந்த ஆண்டு முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19–ந் தேதி முன்அனுமதி பெற்று சந்தித்துள்ளார்.

அப்போது தேவசித்தத்தின் கோரிக்கையை கேட்ட முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அரசின் விதிகளின்படி முதல்தர அரசு பதவி வழங்குவதாகவும், தொடர்ந்து விளையாடுவதற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். ஓரிரு நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா சிகிச்சை பெற சென்றதால் தேவசித்தத்தின் அரசு உதவி கனவும் தகர்ந்தது.

இதனால் தொடர்ந்து அவதியின் உச்சத்தை அடைந்துள்ள தேவசித்தம் கூறியதாவது:– தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன். பொதுவாக இந்திய அணிக்காக விளையாடினால் அந்தந்த மாநில அரசுகள் முதல்தர அந்தஸ்து அரசு பதவி வழங்குவது வழக்கம். அந்த விதிகளின் கீழ் எனக்கு அரசு வேலை வழங்கி உதவ வேண்டும். மேலும், எனது பொருளாதார நிலையை கருதி அரசு நிதி உதவி செய்தால் தொடர்ந்து விளையாடி லங்கடி போட்டியில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து கொடுப்பேன்.

வருகிற நவம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ள சர்வதேச லங்கடி போட்டியில் நிச்சயம் கோப்பை வென்று தருவேன். லங்கடி விளையாட்டிற்காக எனது வேலை உள்ளிட்டவைகளை இழந்து நிற்கும் எனக்கு எந்த உதவியும் கிடைக்காவிட்டால் வாழ்வதற்கு வழியில்லாத நிலையில் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் மாணவி அனிதா எடுத்த முடிவைத்தான் நானும் தேடிச்செல்ல வேண்டி இருக்கும். நான் இறந்த பிறகு எனது குடும்பத்திற்கு அரசு வேலை, நிதி உதவி வழங்கி பயனில்லை என்பதால் எனக்கு வாழ்நாளிலேயே அரசு உதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு கூறினார்.

பாரம்பரிய விளையாட்டில் நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்த சிறந்த விளையாட்டு வீரர் தேவசித்தம் இன்று அரசின் உதவியை எதிர்நோக்கி பரிதவித்து வருகிறார். அவருக்கு தேவையான உதவிகளை அரசும், அவரின்மேல் அக்கறை கொண்ட நல் உள்ளங்களும் செய்தால் ஒரு சிறந்த விளையாட்டு வீரரை காப்பாற்றிய பெருமை சேரும் என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்