‘எங்களது ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது’ தங்க தமிழ்ச்செல்வன் உறுதி

‘எங்களது ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது’ என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-09-05 23:45 GMT

புதுச்சேரி,

புதுவையில் தங்கி இருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தநிலையில் மீண்டும் நேற்று சொகுசு விடுதிக்கு திரும்பினர். அங்கு அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இதில் பழனியப்பன் எம்.எல்.ஏ. தவிர மற்ற 20 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக நிருபர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–

பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று இருந்த எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிக்கு திரும்பி உள்ளனர். நாங்கள் 21 பேர் உள்ளோம். எங்களது ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது.

இன்னும் 2 நாட்களில் கவர்னர் எங்களை அழைத்துப்பேசுவார் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி அவர் அழைத்து பேசாவிட்டால் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்துடைப்பிற்காகத்தான் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

அவருக்கு போட்டியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்த எங்களுக்கு அவசியம் இல்லை. சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு சென்னை சென்று விளக்கம் அளிப்போம்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் யாரும் எதிர் அணிக்கு செல்லவில்லை. சில பணிகளுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் தற்போது விடுதிக்கு திரும்பிவிட்டனர். எங்கள் அணியில் சிலர் வெளியேறிவிட்டதாக தவறான தகவலை பரப்புகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை.

விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிலிப்பர் செல்களாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் என எங்களுக்கு 35 பேருக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு உள்ளது. அவர்கள் யாரும் ஒருபோதும் எங்களைவிட்டு செல்லமாட்டார்கள். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளோம். அதர்மத்துக்கு எதிராக போராடி வருகிறோம்.

தற்போது கட்சி எங்களிடம்தான் உள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டும் கூட்டம் செல்லாது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசு தொடர்பாக ஒவ்வொரு நாளும் 5 எம்.எல்.ஏ.க்கள் சென்று விளக்கம் அளிப்போம்.

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். இதை சொல்வதற்கு அவர் யார்? மாணவி அனிதா சாவுக்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீட் தேர்வே நடந்திருக்காது.

இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.

மேலும் செய்திகள்