வேன்-பஸ் மோதல்: தாய், மகள் உள்பட 3 பேர் பலி சாமி கும்பிட்டு விட்டு திரும்பியபோது பரிதாபம்

திருச்செங்கோடு அருகே, வேன்-பஸ் மோதிக்கொண்ட விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் இறந்தனர். நாமக்கல், திருச்செங்கோட்டில் சாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊர் திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

Update: 2017-09-05 23:00 GMT
எலச்சிபாளையம்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி காந்தாமணி (வயது 50). பட்டு கைத்தறித்தொழில் செய்துவந்தார். இவருடைய மகள்கள் ஹரிபிரியா (33), கிருத்திகா (31). இதில் ஹரிபிரியாவுக்கு கருணாகரன் என்பவருடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

இந்நிலையில் ஹரிபிரியா கர்ப்பம் தரிக்காததால் அவருக்கு டெஸ்ட்டியூப் குழந்தைக்கு ஏற்பாடு செய்ய குடும்பத்தார் முடிவு செய்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பு, நாமக்கல் ஆஞ்சநேயர், திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட முடிவு செய்து, நேற்று காந்தாமணி, ஹரிபிரியா, இவருடைய கணவர் கருணாகரன், கிருத்திகா, காந்தாமணியின் கொழுந்தனார் விஜயகுமார் (50) ஆகியோர் ஒரு வேனில் நாமக்கல், திருச்செங்கோடுக்கு சாமி கும்பிட வந்தனர். வேனை ஈரோடு வெள்ளியம்பாளையம்புதூரை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் (35) ஓட்டிவந்தார். இவரே வேனின் உரிமையாளரும் ஆவார்.

இவர்கள் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்களது வேன் நேற்று மாலை 5 மணியளவில் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டி பகுதியில் வந்தபோது வேனும், எதிரே ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேன் நொறுங்கி, காந்தாமணி, இவருடைய மகள்கள் ஹரிபிரியா, கிருத்திகா, மருமகன் கருணாகரன், டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். விஜயகுமார் லேசான காயம் அடைந்தார்.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காந்தாமணி, ஹரிபிரியா, டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் வழியிலேயே இறந்து விட்டனர். இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த மற்றவர்கள் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்