நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகளுக்குள் வெள்ளம் புகுந்தது
கோவையில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் நோயாளிகள், மாணவ–மாணவிகள் அவதியடைந்தனர்.
கோவை,
கோவையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போன்று தேங்கியது. மேலும் அந்தப்பகுதியில் இருக்கும் வீடுகளை மழைநீர் சூழ்ந்து நின்றது. கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் மழைதண்ணீர் சூழ்ந்தது. அத்துடன் அங்குள்ள குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டு, மகப்பேறு வார்டு, தீக்காயத்துக்கு சிகிச்சை பெறும் வார்டு, செவிலியர்கள் தங்கி இருக்கும் பகுதி ஆகியவற்றுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் மகப்பேறு வார்டில் வெளி ஆட்கள் காத்திருக்கும் பகுதி உள்ளது. அந்த பகுதியிலும் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது. எனினும் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் தேங்கி நின்ற தண்ணீரில் நடந்து சென்று, அங்கு போடப்பட்டு உள்ள இருக்கையில் அமர்ந்து காத்திருந்தனர். அத்துடன் சிலர் அந்தப்பகுதியில்தான் தொட்டில் கட்டி தங்கள் குழந்தைகளை படுக்க வைத்தனர். இதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
இதுதவிர பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு முன்பு மழைநீர் குளம் போன்று தேங்கி நின்றது. இதனால் அங்கு செல்லும் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்தனர். பின்னர் நேற்று காலையில் மின் மோட்டார் மூலம் அந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மழை பெய்யும்போது ஆஸ்பத்திரிக்குள் தொடர்ந்து தண்ணீர் புகுந்த வருவதால், அதை தடுக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று, அங்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் நோயாளிகள் கூறினார்கள்.
மேலும் மழை காரணமாக கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடைபயிற்சி செல்லும் பகுதியில், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அதுபோன்று வடகோவை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, கிக்கானி பள்ளி அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதைத்தொடர்ந்து காலையில் மாநகராட்சி ஊழியர்கள் அந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றினார்கள்.
அதுபோன்று கோவை மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. உக்கடம் கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. எனினும் மாணவர்கள் அந்த தண்ணீரில் நடந்து தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.
கோவை புலியகுளம் மீனா எஸ்டேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திலும் மழைநீர் குளம்போன்று தேங்கி நின்றது. குறிப்பாக 5–ம் வகுப்பு வரை உள்ள கட்டிடம் இருக்கும் பகுதிக்கு மாணவர்கள் செல்ல முடியாத அளவுக்கு அந்தப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் 1 முதல் 5–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதுபோன்று சுங்கத்தில் இருந்து புலியகுளம் செல்லும் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திலும் மழைநீர் குளம்போன்று தேங்கியது. அதுபோன்று சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேல்நிலைப்பள்ளி உள்பட ஏராளமான பள்ளிகளின் வளாகத்தில் மழைநீர் தேங்கியது. சில பள்ளிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மாணவ–மாணவிகள் அவதியடைந்தனர்.
கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 1–வது ‘ஏ’ நடைமேடையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. கனமழை காரணமாக அந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக பயணிகள் யாரும் வராததால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.