சம்பளம் வழங்காததால் ரெயில் நிலைய துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து மதுரை ரெயில்நிலைய துப்புரவு பணியாளர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-05 23:00 GMT

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சி.ஐ.எப்.எம்.எஸ். என்ற நிறுவனம் துப்புரவு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் ஒப்பந்த காலம் கடந்த 3–ந் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு மதுரை கோட்ட ரெயில்வே மருத்துவ பிரிவு தற்காலிகமாக மேலும் 45 நாட்களுக்கு ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் துப்புரவு பணிகளை செய்து வருபவர்கள் நேற்று மதுரை ரெயில்நிலையத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டத்துக்கு ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் நவுசாத் அலி தலைமை தாங்கினார். இதைதொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதைதொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் அனைவரும் இன்று(புதன்கிழமை) முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.

மேலும் செய்திகள்