பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4,850 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் முகவர்கள் பெரும் நிறுவனங்களிடமிருந்து எரிபொருட்களை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். இதில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு உரிய எரிபொருளை வழங்காமல் குறைவாக வழங்குவது, தவறான அளவீடுகளை காட்டுவது, எரிபொருள் வழங்கும் குழாய் முனையில் பல தந்திரங்களை செய்வது, கலப்பட எரிபொருளை வழங்குவது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குடிநீர், காற்று, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. இதுபோன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்துவற்காக உத்தரபிரதேச மாநில அரசு சிறப்புப்படை ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
விற்பனை நிலையங்களில் உள்ள எரிபொருள் குழாய் அடர்நிறம் கொண்டிருப்பதால் எரிபொருள் கசிவு இருந்தால் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. மேலும் எரிபொருள் செல்வது தெரியும் வகையில் வெள்ளை நிற குழாய் பயன்பாட்டில் இருந்தால் எரிபொருள் திருட்டும் தவிர்க்கப்படும்.
எனவே அனைத்து விற்பனை நிலையங்களிலும் வெளிப்படையான வெள்ளை நிற குழாயை எரிபொருள் வழங்க பயன்படுத்தவும், எரிபொருள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க சிறப்புப்படை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில் இந்த வழக்கு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், தமிழக வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை இணை தலைமை கட்டுப்பாட்டாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 18–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.