மதுரவாயலில் ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை லாக்கரோடு தூக்கி சென்றனர்

மதுரவாயலில் ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 100 பவுன் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை தூக்கி சென்றனர்.

Update: 2017-09-05 22:30 GMT

பூந்தமல்லி,

மதுரவாயல் கிருஷ்ணா நகர் 17–வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 68). ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர். இவரது மனைவி ஜெயலட்சுமி. கடந்த 30–ந்தேதி சந்திரசேகரன் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூரில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு மனைவியுடன் சென்றார்.

இந்தநிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சந்திரசேகரின் 2–வது மகன் பிரகாஷ்குமார், தனது அண்ணன் செந்தில்குமாருடன் நேற்று காலை மதுரவாயலில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க மரக்கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் திறக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் சிதறிக்கிடந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மதுரவாயல் உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு, அங்கு நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்தனர்.

உடைக்க முடியாததால் அதிக எடையுள்ள அந்த லாக்கரை கொள்ளையர்கள் தூக்கி சென்று விட்டனர். அதில் சுமார் 100 பவுன் தங்கநகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் மற்றும் பணம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை கண்காணித்த கொள்ளையர்கள் வீடு புகுந்து நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை தூக்கி சென்றுள்ளனர். அதில் 15 பவுன் நகைகளும், சொத்து ஆவணங்கள் இருப்பதாகவும், சந்திரசேகரன் திரும்பி வந்த பிறகே எவ்வளவு கொள்ளை போனது என்பது முழுமையாக தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்