சித்தராமையாவின் இல்லங்களில் பிஸ்கட், டீ–காபி, குடிநீருக்கு ரூ.59.17 லட்சம் செலவு
2013–14ம் ஆண்டில் இருந்து சித்தராமையாவின் இல்லங்களில் பிஸ்கட், டீ–காபி, குடிநீருக்கு ரூ.59.17 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
2013–14ம் ஆண்டில் இருந்து சித்தராமையாவின் இல்லங்களில் பிஸ்கட், டீ–காபி, குடிநீருக்கு ரூ.59.17 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.) மூலம் தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் முதல்–மந்திரியின் இல்ல அலுவலகம் கிருஷ்ணா, அலுவலக இல்லம் காவேரி உள்ளன. இந்த இல்லங்களில் மந்திரிகள், அரசு அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்களுடன் முதல்–மந்திரியாக உள்ள சித்தராமையா அடிக்கடி ஆலோசனை நடத்துவார். மேலும், அந்த இல்லங்களில் சித்தராமையா ஜனதா தரிசனம் என்னும் மக்கள் குறைகேட்பு கூட்டமும் நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.இந்த நிலையில், சித்தராமையா முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்றது முதல் அதாவது கடந்த 2013–14–ம் ஆண்டில் இருந்து 2017–18–ம் ஆண்டு வரை அவருடைய 2 இல்லங்களிலும் பிஸ்கட், டீ, காபி மற்றும் குடிநீர் (மினரல் வாட்டர்) ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.59.17 லட்சம் செலவு செய்யப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.) மூலம் தெரியவந்துள்ளது. இந்த செலவு விவரங்கள் வருமாறு:–
கடந்த 2013–14–ம் ஆண்டில் பிஸ்கட்டுக்கு ரூ.3.65 லட்சம், காபி, டீ, குடிநீர் ஆகியவற்றுக்கு ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.13.65 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2014–15–ம் ஆண்டில் பிஸ்கட்டுக்கு ரூ.4.56 லட்சம், காபி, டீ, குடிநீர் ஆகியவற்றுக்கு ரூ.6.50 லட்சம் செலவிடப்பட்டு இருக்கிறது.2015–16–ம் ஆண்டில் பிஸ்கட்டுக்கு ரூ.4.56 லட்சமும், காபி, டீ, குடிநீருக்கு ரூ.6.70 லட்சமும், 2016–17–ம் ஆண்டில் பிஸ்கட்டுக்கு ரூ.4.50 லட்சமும், காபி, டீ, குடிநீருக்கு ரூ.7 லட்சமும் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2017–18–ம் ஆண்டில் இதுவரை பிஸ்கட்டுக்கு ரூ.4.50 லட்சமும், காபி, டீ, குடிநீருக்கு ரூ.7.20 லட்சமும் செலவிடப்பட்டு உள்ளது. இவ்வாறாக பிஸ்கட்டுக்கு ரூ.21.77 லட்சமும், காபி, டீ, குடிநீருக்கு ரூ.37.40 லட்சம் என மொத்தம் ரூ.59.17 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.