மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்: புதுவை கவர்னர் மாளிகையை மாணவர்கள் முற்றுகையிட முயற்சி

மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு புதுச்சேரியில் மாணவர்கள் ஊர்வலமாக வந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-09-05 02:15 GMT
புதுச்சேரி,

நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதையொட்டி தமிழகம், புதுவையில் நேற்று பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

புதுவையில் பல்வேறு மாணவர்கள் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் மரப்பாலம், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சிலை சிக்னல் பகுதிகளில் திரண்டனர். அந்த வழியாக சென்ற மாணவர் சிறப்பு பஸ்கள் மற்றும் கல்லூரி பஸ்களை வழிமறித்து அவற்றில் வந்த மாணவர்களை போராட்டத்துக்கு அழைத்தனர். அந்த மாணவர்களும் பஸ்களில் இருந்து இறங்கி போராட்டங்களில் பங்கேற்றனர்.

இதனால் அந்த சிக்னல் களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. உடனே அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நீண்டநேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர்.

சட்டக்கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், பாரதிதாசன் மகளிர் கல்லூரி, ஜீவானந்தம், வ.உ.சி. உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்களில் ஒருபகுதியினர் கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் அணி அணியாக ராஜா தியேட்டர் சந்திப்பு நோக்கி திரண்டு வந்தனர். அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக கவர்னர் மாளிகை நோக்கி புறப்பட்டனர். நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களை பேரிகார்டுகளை (தடுப்புகள்) வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அங்கு அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும், அனிதாவின் தற்கொலைக்கு நீதிவேண்டியும் கோஷங்களை எழுப்பினார்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் மாணவர்களில் சிலர் போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டு கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர் சிலர் தடுப்பு கட்டைகளின் மீது ஏறி நின்று போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை போலீசார் கட்டுப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனிடையே மாணவர்களில் சிலர் அங்கிருந்த பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குள் புகுந்தனர். அங்கு தரையில் அமர்ந்த அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதன்பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவர்களின் திடீர் போராட்டம் காரணமாக புதுவை கவர்னர் மாளிகையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்