மாணவிகள் மர்மச்சாவு வழக்கு: உரிய விசாரணைக்கோரி கலெக்டரிடம் பெற்றோர் மனு
மாணவிகள் மர்மச்சாவு வழக்கில் உரிய விசாரணைக்கோரி கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மணப்பாறை வையம்பட்டி அருகே தண்டவாளம் அருகே 2 மாணவிகள் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து அவர்களது பெற்றோர் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்களது மகள் ரதிதேவி(வயது 15). அவருடன் படிக்கும் மற்றொரு மாணவி செல்வி(15) ஆகிய இருவரும் கடந்த 3–ந் தேதி ரெயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இந்த வழக்கில் இதுவரை உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள விவரங்கள் குறித்தும் பெற்றோருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. ஆகவே இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அந்தோணியார்கோவில் தெருவை சேர்ந்த காந்தா என்பவர் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எனது மகன் விக்டர் (38). இவர் அ.தி.மு.க.வில் இளைஞர் பாசறையில் இருந்தார். இவரை கடந்த ஜூலை மாதம் 13–ந் தேதி சிலர் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே எனது மகனை அடித்து கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன் கொடுத்த மனுவில், “திருச்சியில் கடும் வறட்சியை கருத்தில் கொண்டு மாநகராட்சி தினசரி குடிநீர் வினியோகத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் என்று மாற்றியது. இந்தநிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் வருகிறது. ஆகவே பொதுமக்கள் நலன்கருதி தினமும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.