ஆண்டிப்பட்டியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், ஆண்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-09-04 22:45 GMT

ஆண்டிப்பட்டி,

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், ஆண்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க தேனி மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிப்பட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக கலைக்கல்லூரியை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகத்தில் நீட்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். முன்னதாக ஆண்டிப்பட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இருந்து வேலப்பர் கோவில் விலக்கு வரை மாணவ–மாணவிகள் ஊர்வலமாக வந்தனர். அப்போது ஊர்வலத்துக்கு அனுமதி பெற்றிருந்த இடத்தை தாண்டி மாணவ–மாணவிகள் சென்றதாக கூறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்