திருவொற்றியூரில் டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கினார்கள்
திருவொற்றியூரில் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கி பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ஜீவன்லால் நகரில் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கூடங்கள், கோவில்கள் நிறைந்த இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என தெரிவித்தனர்.
ஆனாலும் அந்த கடை தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் நேற்று மாலை ஏராளமான பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் திடீரென அந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர்.
ஆவேசம் அடைந்த அவர்கள் கடையில் இருந்த மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். அங்கு மது குடித்து கொண்டிருந்த குடிமகன்களை வெளியே விரட்டினார்கள்.
ஊழியர்களையும் வெளியே அனுப்பி விட்டு கடையை மூடி பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கடையை திறக்கக்கூடாது என்றுகூறி கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் எங்கள் கணவர்கள் குடிக்காமல் ஒழுங்காக கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் கடை திறந்ததும் தொழிலுக்கு செல்லாமல் மறுபடியும் குடிக்க ஆரம்பித்து விட்டனர். எனவே இந்த பகுதியில் இனி டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது’ என்றனர்.
இதேபோல் விம்கோ நகர் மார்க்கெட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையையும் பெண்கள் இழுத்து மூடினார்கள்.