நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தூக்கில் தொங்கும் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை கண்டித்தும் சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தூக்கில் தொங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-04 23:30 GMT

சிவகங்கை,

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கூடினர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் அரை நிர்வாணத்துடன் தூக்கில் தொங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாயில் கருப்புத்துணி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலா, மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் வேங்கை பிரபாகரன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் தீனதயாளன், தட்சிணாமூர்த்தி, சகாயம், பெரியகருப்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்தும் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். பின்னர் கல்லூரி மாணவர்கள் அரண்மனை வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியல் செய்த மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

மேலும் செய்திகள்