மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள்,

Update: 2017-09-04 23:30 GMT
பூந்தமல்லி,

அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பொன்னேரியில் கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் செய்தனர்.

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் நேற்று காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கோவூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போரூர்-குன்றத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் கைகளில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கல்லூரி முன் ஜி.எஸ்.டி. சாலை ஒரம் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே சட்ட கல்லூரி மாணவர்கள், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அரிஹரன்சாலை, தேரடிசாலை வழியாக ஊர்வலமாக புதிய பஸ் நிலையம் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அதேநேரத்தில் இந்த கல்லூரி மாணவ-மாணவிகள் சிலர் பொன்னேரி ரெயில் நிலையத்தில் சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அனிதா சாவுக்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்தனர். அதை ஏற்று ரெயில் மறியலை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் கால தாமதமாக அந்த ரெயில் கும்மிடிப்பூண்டி புறப்பட்டு சென்றது.

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட மாணவர்கள் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் எனக்கூறி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்