அண்ணணை குத்திக்கொன்ற தம்பிகள் கைது குடிபோதையில் சொத்தை பிரித்து கேட்டதால் ஆத்திரம்

குடிபோதையில் சொத்தை பிரித்துக்கேட்ட ஆத்திரத்தில் அண்ணனை குத்திக்கொலை செய்த அவரது தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-03 22:55 GMT

மும்பை,

குடிபோதையில் சொத்தை பிரித்துக்கேட்ட ஆத்திரத்தில் அண்ணனை குத்திக்கொலை செய்த அவரது தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சொத்தை கேட்டு தகராறு

மும்பை டோங்கிரி பகுதியை சேர்ந்தவர் நிஜூருதீன்(வயது48). இவர் தனது தம்பிகளான அலாவூதின்(47), அமிருதீன்(45) ஆகியோருடன் பைசல் ஆமன் குடியிருப்பில் வசித்து வந்தார். நிஜூருதீன் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நிஜூருதீன் வெளியே சென்றுவிட்டு குடிபோதையில் அதிகாலை 1 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் கதவை தட்டி சத்தம்போட்டார்.

அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அலாவூதின், அமிருதீன் ஆகியோர் கதவை திறக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நிஜூருதின் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு சகோதரர்களிடம் தகராறு செய்தார்.

2 பேர் கைது

இதனால் ஆத்திரமடைந்த அலாவூதின், அமிருதீன் ஆகியோர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரை சரமாரியாக குத்தினர். இதில் படுகாயமடைந்த நிஜூருதீனை அதே பகுதியில் வசித்து வரும் அவரது அக்காள் ருக்கியா மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜே.ஜே. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிஜூருதீனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து ஜே.ஜே. மார்க் போலீசார் வழக்கு பதிவுசெய்து அலாவூதின், அமிருதீன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்