பெரியகுளத்தில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரியகுளம்,
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மேல்மங்கலம் கிராமத்துக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பெரியகுளம் போலீசில் விஜயகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வந்து திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வடகரையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திருட்டு சம்பவம் நடந்து இருப்பது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.