தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் த.மா.கா. பங்கேற்காது ஜி.கே.வாசன் பேட்டி

தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் த.மா.கா. பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2017-09-03 23:45 GMT

திருச்சி,

திருச்சி உறையூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘நீட்‘ தேர்வு குழப்பத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (அதாவது இன்று) அரியலூர் சென்று மாணவியின் தந்தையை சந்திக்க உள்ளேன். மழை காரணமாக திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் இறந்த சம்பவம் கேட்டு வருத்தம் அடைந்தேன். மாநகராட்சி நிர்வாகம் பழைய கட்டிடங்கள் மீது புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது. பழைய கட்டிடங்களின் தரத்தினை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு உகந்த காலம் என்பதால் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விட மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை மத்திய–மாநில அரசுகள் தள்ளுபடி செய்து, பயிர்களுக்கான காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.

தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளை (அதாவது இன்று) நடைபெறும் அந்த கூட்டத்தில் த.மா.கா. பங்கேற்காது. ஆனால் நீட் தேர்வுக்கு எதிரான கொள்கைகளுக்கு உடன்படுகிறேன். மாணவி அனிதாவின் சாவு ஒரு பாடம். எனவே நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர் திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமான இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்