திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்: கணவன்–மனைவி உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலி

திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கணவன்–மனைவி உள்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-09-04 01:15 GMT

திருச்சி,

திருச்சி மலைக்கோட்டை கோவில் அருகே உள்ள கீழ ஆண்டாள் வீதி பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் (வயது 65). சினிமா வினியோகஸ்தர். இவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் சின்னக்கடை வீதி அருகே உள்ள தஞ்சாவூர் குளத்தெரு மாரியப்பன் முதலியார் சந்து பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளம் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. அதற்கு மேல் உள்ள முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பும், 3–வது தளம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்பட்டன. 3–வது தளத்தின் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் ஆனது.

தரைத்தளத்தில் உள்ள வீட்டில் கிருஷ்ணவேணியும்(48), அவரது மகன்கள் வினோத்(20), விக்னேஷ் குமார்(17) மற்றும் மாமியார் ரஞ்சிதம்(70) ஆகியோரும் வசித்து வருகிறார்கள். மேலும் அதே தளத்தில் உள்ள ஒரு அறையில் தக்காளி வியாபாரிகளான தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை மேலத்தெருவை சேர்ந்த மதிவாணன்(53), திருச்சி லால்குடி இடங்கிமங்கலத்தை சேர்ந்த கார்த்திக்(35), பெட்டவாய்த்தலை பொய்யாமணியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கண்ணன்(17) ஆகியோர் தங்கியிருந்தனர்.

முதல் மாடியில் பழைய பேப்பர், இரும்பு வியாபாரியான பழனி(30), அவருடைய மனைவி ராஜாத்தி(28), 1½ வயது குழந்தை பரமேஸ்வரியுடன் வசித்து வந்தார். 2–வது தளத்தில் அச்சகத்தில் பணிபுரிந்து வந்த கார்த்திக்(30), அவரது மனைவி கார்த்திகா(28), மகன் ஹரீஸ்(6) ஆகியோர் வசித்து வந்தனர். 3–வது தளத்தில் ஆட்டோ டிரைவரான சங்கர்(38), அவரது மனைவி அன்பழகி, மகன் தினேஷ்(17), மகள் திவ்யா(15) ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாநகரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கண்ணப்பனுக்கு சொந்தமான அந்த 3 மாடி கட்டிடத்தின் சுவர்களில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது.

விரிசல்களில் இருந்து மண் கீழே விழுவதை தரைத்தள வீட்டில், மடிக்கணினியில் சினிமா படம் பார்த்து கொண்டிருந்த வினோத் பார்த்தார். ஏதோ அசம்பாவித சம்பவம் ஏற்படப்போகிறது என்ற அச்சத்தில் அவர் தூங்கி கொண்டிருந்த தனது தம்பி விக்னேஷ்குமாரை எழுப்பி அழைத்துக்கொண்டு அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். வினோத்தின் தாய் கிருஷ்ணவேணியும், பாட்டி ரஞ்சிதமும் அதே உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவே சென்று விட்டனர்.

இதேபோன்று நேற்று முன்தினம் இரவே ஆட்டோ டிரைவர் சங்கர் தனது குடும்பத்தினருடன் விருத்தாசலம் அருகே உள்ள ஆதனூரில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார். அதிகாலை 3.45 மணியளவில் திடீரென்று அந்த 3 மாடி கட்டிடம் ஆட்டம் கண்டு கீழே விழத் தொடங்கியது.

இதனை உணர்ந்த தரைத்தளத்தில் இருந்த தக்காளி வியாபாரி கண்ணன், அருகே தூங்கி கொண்டிருந்த சக வியாபாரிகளான கார்த்திக், மதிவாணன் ஆகியோரை அவசர அவசரமாக எழுப்பினார். விபரீதம் நடக்கப்போகிறது என்பதை அறிந்து இவர்கள் 3 பேரும் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. வெளிக்கதவை கஷ்டப்பட்டு திறந்து வெளியேறிய போது, கட்டிட சுவர்களின் ஒரு பகுதி அவர்கள் மீது விழுந்தது. இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 3 மாடி கட்டிடம் முழுவதும் சீட்டுக்கட்டுகள் சரிந்து விழுவது போன்று மளமளவென்று பலத்த சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்தன. இதில் அந்த 3 மாடி கட்டிடமும் தரைமட்டமானது.

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். இதில் அந்த கட்டிடத்தின் முதல் மற்றும் 2–வது மாடிகளில் வசித்த அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி கோட்டை போலீசாருக்கும், கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

முதலில் சுவர்கள் விழுந்ததில் படுகாயம் அடைந்த கண்ணன், மதிவாணன், கார்த்திக் ஆகியோரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் பணியை மேற்கொண்டனர்.

3 மாடி கட்டிடமும் அப்படியே இடிந்து விழுந்ததால் நொறுங்கி கிடந்த கட்டிட பாகங்களை அகற்ற முடியவில்லை. இதையடுத்து மீட்பு பணிக்காக சம்பவ இடத்துக்கு 3 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதை அறிந்து, அங்கு தயார்நிலையில் 108 ஆம்புலன்சுகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. இடிந்து போன கட்டிடத்தின் 2–வது தளத்தில் வசித்த கார்த்திகா கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து கார்த்திகாவின் கணவர் கார்த்திக், ஹரீஸ் ஆகியோர் என்ன ஆனார்கள்? என்று மீட்பு குழுவினர் தேடி பார்த்தனர். அப்போது கார்த்திக்கும், அவரது மகன் ஹரீசும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதும் அவர்கள் மீது கதவு விழுந்து கிடப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணி நடந்தது. ஆனால் இதில் தந்தை–மகன் இருவரது உயிரற்ற உடல்களைத்தான் மீட்க முடிந்தது.

இந்த இடிபாடுகளுக்குள் மேலும் பலர் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. அப்போது மதியம் 12 மணியளவில் இடிந்து கிடந்த பெரிய சிலாப்பை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்திய போது அந்த சிலாப்புக்கு அடியில் ஒரு குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த குழந்தையை லாவகமாக மீட்கும் பணி நடந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தை முதல் தளத்தில் வசித்து வந்த பழனியின் மகள் பரமேஸ்வரி என தெரிய வந்தது. குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. குழந்தையின் பெற்றோர் என்ன ஆனார்கள் என்று மீட்பு குழுவினர் அடுத்த கட்ட மீட்பு பணியில் ஈடுபட்டபோது, அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பழனியும், அவருடைய மனைவி ராஜாத்தியும் உடல் நசுங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், அருகில் உள்ள கண்ணப்பனின் தம்பி ராஜேந்திரன் வீட்டின் ஒரு பக்க சுவரும் இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் தரைத்தளத்தில் வாடகைக்கு குடும்பத்துடன் தங்கியிருந்த முகமதுயூசுப் குடும்பத்தினர் காயமின்றி தப்பினர். ஆனால் முதல் மாடியில் வாடகைக்கு தனியாக வசித்து வரும் சுந்தரவள்ளி(70) கீழே இறங்க முடியாமல் தவித்தார். அந்த கட்டிடத்தில் ஏணி மூலம் தீயணைப்பு வீரர் ஒருவர் ஏறி சுந்தரவள்ளியை தோளில் சுமந்து கீழே கொண்டு வந்தார்.

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கணவன்–மனைவி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்