மஞ்சூர் அருகே சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு சாவு
மஞ்சூர் அருகே சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு இறந்தது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே முள்ளிமலை பூதியாடா காலனி உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் தேயிலை தோட்டங்களும், அடர்ந்த வனப்பகுதிகளும் உள்ளன. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் இரையை தேடி குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் ஊரை ஒட்டி உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் ஆடு, மாடுகளையும் சிறுத்தைப்புலிகள் அடித்து கொன்று விடுகின்றன. இதனால் சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முள்ளிமலை பூதியாடா பகுதியை சேர்ந்த பசவன்(வயது 50) என்பவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றது அதன்பிறகு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரும், உறவினர்களும் அந்த பசுமாட்டை ஊரை ஓட்டி உள்ள தேயிலை தோட்டங்களில் தேடினர்.
அப்போது தேயிலை தோட்டத்திற்குள் சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு இறந்து கிடந்ததை பார்த்தனர். பசுமாட்டின் பாதி உடலை சிறுத்தைப்புலி சாப்பிட்டு விட்டு மீதியை அப்படியே போட்டு விட்டு சென்று விட்டது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், கால்நடை டாக்டர் வினோத் மற்றும் உதவியாளர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்த பசுமாட்டின் உடலை பிரேதபரிசோதனை செய்து அங்கேயே உடல் புதைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தைப்புலி தாக்கி தான் பசுமாடு இறந்து உள்ளது. எனவே தேயிலை தோட்ட பகுதியில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றனர்.