நீட்` தேர்வை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

‘நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவிலில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-03 23:00 GMT

நாகர்கோவில்,

அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பகிரங்க பொதுமன்னிப்பு கேட்க வேண்டும், ‘நீட்` தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார்.

கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன், நிர்வாகிகள் முருகன், சிறுத்தை தாஸ், பேரறிவாளன், தமிழ்சுதன், ஜான், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா பஸ் நிலையம் முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட திருமாவேந்தன் உள்பட 24 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் வாகனத்தில் ஏற்றி கோட்டார் போலீஸ் நிலைய மாடிக்கு அழைத்து சென்று அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று முன்தினம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனர். இந்தநிலையில் நேற்றும் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்துவதற்காக அண்ணா விளையாட்டரங்கம் முன் கூடினர். இதையறிந்து அங்கு வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்