சேவை செய்யும் துபாய் இளவரசி - ஹயா பிந்த் அல் ஹுசைன்!

இந்த பெயர் சர்வதேச அளவில் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு பரிச்சயமானது. ஜோர்டான் நாட்டின் மன்னர் ஹுசைன் - இளவரசி ஆலியா ஆகியோருக்கு மகளாக 1974-ம் ஆண்டு மே மாதம் 3- ந் தேதி பிறந்தவர் இவர்.

Update: 2017-09-03 06:30 GMT
ந்த பெயர் சர்வதேச அளவில் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு பரிச்சயமானது. ஜோர்டான் நாட்டின் மன்னர் ஹுசைன் - இளவரசி ஆலியா ஆகியோருக்கு மகளாக 1974-ம் ஆண்டு மே மாதம் 3- ந் தேதி பிறந்தவர் இவர். இவரது சகோதரர் அப்துல்லா ஹுசைன். இவர்தான் தற்போது ஜோர்டான் நாட்டின் ஆட்சி பொறுப்பில் உள்ளார். இளவரசி ஹயா, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

2004- ம் ஆண்டு ஏப்ரல் 10- ந் தேதி துபாய் ஆட்சியாளரும் அமீரக பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை இளவரசி ஹயா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷேக்கா அல் ஜலீலா என்ற 9 வயது மகளும், ஷேக் ஜாயித் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.

சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் உடையவராக விளங்கிய ஹயா, துபாய் ஆட்சியாளரை திருமணம் செய்தபிறகு சமூக சேவைகளில் ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கினார். இதற்காக இவரை கடந்த 2007- ம் ஆண்டில் அமைதிக்கான தூதராக ஐ. நா. சபை நியமனம் செய்தது.

அதன் பிறகு சொந்த நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ‘டிகியத் உம் அலி’ என்ற பெயரில் அரசு சாரா பொது அமைப்பு ஒன்றை இளவரசி ஹயா ஏற்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு நிவாரண உதவிகளை செய்ய வாடிகன் நகரத்தில் சர்வதேச மனித நேய நகரத்தை உருவாக்கினார். உலகிலேயே இது மிக பெரிய தொண்டு நகரமாகும்.

சிரியா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவிய உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. சார்பில் செயல்படும் 40 அமைப்புகளை ஒன்று திரட்டி உதவி செய்தார். 2009-ம் ஆண்டில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு நிவாரண உதவி அளித்தார். இது போல இன்னும் பல்வேறு நாடு களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

இது குறித்து இளவரசி அளித்த பேட்டி:

‘என் கணவர் எனது நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். உலக அளவில் நான் செய்யும் மனிதநேய செயல்களுக்கு எனது கணவர் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். எனது சேவை திட்டங்களை செயல்படுத்துவதில் என் கணவருக்கு பெரும் பங்கு உள்ளது. சமீபத்தில் தனி விமானம் மூலம் 90 மெட்ரிக் டன் எடையுள்ள நிவாரண பொருட்களை ஹைத்தன் நாட்டில் மாத்யூ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தோம்.

ஒரு தாயாக எங்கள் குழந்தைகளுக்கு செய்யவேண்டிய கடமைகளையும் நான் செய்யவேண்டியதிருக்கிறது. அதையும் நான் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். என் கணவரை பற்றி சொல்லவேண்டும் என்றால் நேரம் பார்க்காமல் உழைக்கக்கூடியவர். எப்போதும் நாட்டையும், மக்களையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர். அவரது நோக்கம் நிறைவேறும் வரை தொடர்ந்து செயலாற்றி கொண்டிருப்பார். தற்போது மனிதநேய செயல்களுக்காக என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். பல்வேறு பின்தங்கியுள்ள நாடுகளுக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து முடிந்த அளவு அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். சேவையில் நான் இன்னும் வெகுதூரம் பயணப்பட வேண்டியுள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்