பாளையங்கோட்டையில் சிறை அங்காடி கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் மீண்டும் ‘சிறை அங்காடி’ அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று திறந்து வைத்தார்.

Update: 2017-09-02 23:26 GMT
நெல்லை,

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் ஏற்கனவே சிறை அங்காடிகள் திறக்கப்பட்டு கைதிகள் உற்பத்தி செய்த பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. பின்னர் அவை மூடப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் சிறை அங்காடிகள் புதுப்பிக்கப்பட்டன. பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் ரோட்டையொட்டி சிறை அங்காடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று சிறை அங்காடியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ், பாளையங்கோட்டை மத்திய சிறை சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன், கூடுதல் ஜெயிலர் சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் மூடப்பட்டு இருந்த சிறை அங்காடிகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது. இதில் சிறை வளாகத்தில் கைதிகள் தயார் செய்யும் காய்கறிகள், இனிப்பு வகைகள், சட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். மேலும் டீக்கடையும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு டீ விற்பனை செய்யப்படும். இந்த கடைக்கு சிறை வளாகத்தில் உள்ள மாட்டு பண்ணையில் கிடைக்கும் பால் பயன்படுத்தப்படும். மேலும் துணி இஸ்திரி கடை, சலூன் கடையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளில் 35 கைதிகள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு லாபத்தில் 20 சதவீதம் வழங்கப்படும். மற்றவை அரசு கஜானாவில் செலுத்தப்படும்.

இதுதவிர தமிழகத்தில் 9 சிறைகளில் பேக்கரி பொருட்கள் தயார் செய்ய ரூ.8 கோடியில் எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களும், சிறை அங்காடிகளில் விற்பனை செய்யப்படும்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1,200 கைதிகள் உள்ளனர். அவர்கள் சிறையை விட்டு வெளியே சென்ற பிறகு ஏதேனும் தொழில் தொடங்கி நல்ல முறையில் வாழ்க்கையை நடத்த, சிறைக்குள்ளே தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. எலக்ட்ரிக்கல், ஆட்டோ மொபைல் போன்ற பிரிவில் தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கைதிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா மற்றும் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

சிறையில் தற்போது கைதிகள் தற்கொலைகள் குறைந்து விட்டன. ஒருசில இயற்கை மரணங்கள் மட்டுமே நடக்கிறது. கைதிகளின் நடத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் 100 சதவீதம் தடுக்கப்படுகிறது. மேலும் அடுத்தபடியாக கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ‘ஜாமர் கருவி’ பொருத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்