‘பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் பயப்படுகிறார்கள்’ பா.ஜனதா எம்.பி. நானாபாவ் படோலே பரபரப்பு பேச்சு
‘‘பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் பயப்படுகிறார்கள்’’ என்று பா.ஜனதா எம்.பி. நானாபாவ் படோலே பரபரப்பாக பேசினார்.
நாக்பூர்,
‘‘பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் பயப்படுகிறார்கள்’’ என்று பா.ஜனதா எம்.பி. நானாபாவ் படோலே பரபரப்பாக பேசினார்.
நானாபாவ் படோலே எம்.பி.மராட்டிய மாநிலம் நாக்பூரில் ‘விவசாயிகள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் விதர்பா மண்டலத்தின் நீர்ப்பாசன வசதி’ என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில், அந்த மாநிலத்தை சேர்ந்த பண்டாரா– கோண்டியா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நானாபாவ் படோலே (பா.ஜனதா) கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பிரதமர் மோடியையும், மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசையும் அவர் வெளிப்படையாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நானாபாவ் படோலே எம்.பி. பேசியதாவது:–
மோடி ஆத்திரப்படுகிறார்டெல்லியில் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற எம்.பி.க்களின் கூட்டத்தின்போது, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை நான் எழுப்பினேன். அப்போது, மோடி மிகவும் ஆத்திரம் அடைந்தார். அவர் விமர்சனங்களை விரும்புவது இல்லை. எதிர்க்கட்சியினரின் குரலை கேட்க அவருக்கு பிடிக்காது. மோடியை பார்த்து மத்திய மந்திரிகள் பயப்படுகிறார்கள். ஆனால், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் விவசாயியின் மகன். விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
எம்.பி.க்களுக்கு மதிப்பு இல்லைபிராந்திய எம்.பி.க்களுக்கு மாநில அரசு மதிப்பு கொடுப்பதே இல்லை. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எந்தவொரு திட்டத்தையும் எம்.பி.க்களுடன் கலந்து ஆலோசிப்பது இல்லை. இதனால் தான் கிடப்பில் இருக்கும் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து மோடியிடம் கூறினேன். அவரும் கோபப்படுகிறார். இப்போது எம்.பி.க்கள் எந்தவொரு முடிவு எடுக்கும் நடைமுறையிலும் ஈடுபடுவதில்லை.
மராட்டியத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் நிதி பற்றாக்குறையால் முடங்கி கிடக்கின்றன. மத்திய அரசு மராட்டியத்துக்கு போதுமான நிதி அளிப்பது இல்லை. மராட்டியத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கூட மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று வர தவறிவிட்டனர். ஒட்டுமொத்தமாக, டெல்லியை பொறுத்தமட்டில் மராட்டியத்தின் அடையாளம் சாதாரண பிச்சைக்காரரை போல் மாறிவிட்டது.
இவ்வாறு நானாபாவ் படோலே எம்.பி. தெரிவித்தார்.
அதிர்ச்சிபா.ஜனதாவை சேர்ந்த எம்.பி. ஒருவரே பிரதமர் மோடியையும், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசையும் விமர்சித்து பேசி இருப்பது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.