மனைவியை காலில் விழச்செய்ததால் டிரைவர்கள் 2 பேர் வெட்டிக்கொலை: கொலையாளி கைது

கும்பகோணம் அருகே டிரைவர்கள் 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளியின் மனைவியை காலில் விழச்செய்ததால் இவர்கள் இருவரும் வெட்டிக்கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2017-09-02 23:00 GMT
திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள பழவாத்தான்கட்டளை புதுத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். அருகே உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் கலியமூர்த்தி. இவர்கள் மதுபாட்டில்களை வாங்கி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுக்குள் தொழில் போட்டியால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பாரதிநகர் பகுதியில் ஒருவர் இறந்தார். அவரது இறுதி சடங்கு குறித்து ஆட்டோவில் சென்று மைக் மூலம் ஊர்மக்களுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபட்ட டிரைவர்களான விஸ்வநாதன் மகன் தினேஷ்(22), சாமிநாதன் மகன் குருமூர்த்தி ஆகிய இருவரும் ராமலிங்கத்திடம் மதுபாட்டில்கள் கேட்டனர். இதனால் ராமலிங்கம் சம்பவத்தன்று மதுபாட்டில்களுடன் கலியமூர்த்தி வசிக்கும் பகுதிக்கு சென்றார். இதனால் கோபமடைந்த கலியமூர்த்தி மது பாட்டிலால் ராமலிங்கத்தின் தலையில் தாக்கினார்.

இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். நள்ளிரவில் கலியமூர்த்தி, ராமலிங்கத்துக்கு ஆதரவாக தன்னிடம் தகராறு செய்த டிரைவர்கள் குருமூர்த்தி, தினேஷ் ஆகியோரை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கலியமூர்த்தி ராமலிங்கத்தை தாக்கிய பிறகு ராமலிங்கத்துக்கு ஆதரவாக டிரைவர்கள் குருமூர்த்தி, தினேஷ் ஆகியோர் கலியமூர்த்தியின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர். அப்போது கலியமூர்த்தி மனைவி அவர்களிடம் பிரச்சினை வேண்டாம் எனக்கூறி இருவரின் காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. தனது மனைவியை காலில் விழச்செய்த குருமூர்த்தி மற்றும் தினேஷ் ஆகியோர் மீது கலியமூர்த்தி கோபமடைந்தார். இதனால் தினேஷ், குருமூர்த்தி ஆகிய இருவரையும் கலியமூர்த்தி வெட்டிக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்