இரு தரப்பினர் இடையே மோதல் இரட்டை கொலை வழக்கில் 4 பேர் கைது

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-02 23:00 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ளது கடப்பாக்கம் குப்பம், ஆலம்பர ஊத்துகாட்டு அம்மன் குப்பம். இங்கு உள்ளவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு இரு தரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த வியாழக்கிழமை இரவு அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் உள்ள மோட்டார் என்ஜினில் ஒரு சிலர் மணல் அள்ளி போட்டதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
நேற்றுமுன்தினம் அதிகாலை கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் வெடித்தது. படகுகள், மோட்டார் சைக்கிள்கள், வீடுகள் எரிக்கப்பட்டு கலவரம் ஆனது. இதில் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த சேகர் (வயது 35), ராமகிருஷ்ணன் (34) இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையொட்டி அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், வெங்கடேசன், அந்தோணி ஸ்டாலின், அமல்ராஜ், ரமேஷ் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் செம்மஞ்சேரியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த ஆலம்பர ஊத்துகாட்டு அம்மன் குப்பத்தை சேர்ந்த தங்கபாபு(40), சரவணன்(27), சிவா(40), சுரேஷ்(32) ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட சேகர், ராமகிருஷ்ணன் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்ய நேற்று மாலை எடுத்து செல்லப்பட்டது. சவ ஊர்வலத்தில் 500-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்ட பெண்கள் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்தும் படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் மறியலில் ஈடுபட்ட பெண்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அவர்களின் உடல் அடக்கம் நடந்தது.

மேலும் செய்திகள்