அரியலூர் மாணவி அனிதா தற்கொலை எதிரொலி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; மறியல்
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை எதிரொலியாக அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி அனிதா தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையொட்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், நகர செயலாளர் சன்பிராண்டு ஆறுமுகம், நிர்வாகிகள் சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜீ.வி.மதியழகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி., முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், ராசகுமார், பாலசிங்கம், தளபதி சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது 100–க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.
பின்னர் 100–க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திடீரென திருவள்ளூர்– திருப்பதி நெடுஞ்சாலையான எம்.ஜி.ஆர். சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவில் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதில் பழங்குடியினர் நல முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்னரசு, ஒன்றிய செயலாளர்கள் இளஞ்செழியன், ஈசன், யோகா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை கண்டித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நு£ற்றாண்டு விழாவில் பங்கேற்க வரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பூந்தமல்லியை அடுத்த குமணண்சாவடி பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மண்டல செயலாளர் கவுதமன்கோபு தலைமையில் நடைபெற்றது. இதில் 100–க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் மாங்காடு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஜெயபால், பூந்தமல்லி தொகுதி துனை செயலாளர் கென்னடி ஆகியோர் தலைமையில் மாங்காடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.