சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி.தினகரன் திடீர் சந்திப்பு

புதுவை சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் தங்கி இருந்து வரும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை டி.டி.வி. தினகரன் நேற்று திடீரென்று சந்தித்துப் பேசினார்.

Update: 2017-09-03 01:30 GMT

புதுச்சேரி,

தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதல்– அமைச்சரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இதன்பின் கடந்த 22–ந்தேதி மாலை வெற்றிவேல் தவிர மற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்து தங்கினர்.

3 நாட்கள் மட்டுமே அங்கு தங்கி இருந்த நிலையில் புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அவர்கள் மாறினர். அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (காங்கேயம்), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் வந்து சேர்ந்தனர். இதனால் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிப்பதற்காக வருகிற 12–ந்தேதி பொதுக்குழுவை கூட்டி உள்ளார். இதையொட்டி மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களை அவர் சந்தித்துப் பேசி வருகிறார். புதுச்சேரியில் தங்கி உள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வளைக்க அவர் எம்.எல்.ஏ.வான உளுந்தூர்பேட்டை குமரகுரு மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் தூது மேற்கொள்ள முயன்றார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இந்தநிலையில் ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகியோர் சொந்த ஊர்களுக்கும், சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்) சென்னைக்கும் சென்று உள்ளனர். இவர்கள் தவிர மற்ற 17 எம்.எல்.ஏ.க்கள் சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் 12–வது நாளாக தொடர்ந்து தங்கி இருந்து வருகின்றனர்.

அவர்களை சந்திக்க டி.டி.வி. தினகரன் வருவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து அரியலூருக்கு புறப்பட்ட டி.டி.வி. தினகரன் வழியில் பிற்பகல் 1 மணியளவில் புதுச்சேரி வந்தார். கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பு அருகில் புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். பின்னர் அவர்கள் சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதிக்குச் சென்றனர்.

அங்கு டி.டி.வி. தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசினார். அப்போது அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் மதியம் 2.30 மணிக்கு அங்கிருந்து அரியலூர் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்