அனிதாவின் சாவுக்கு மத்திய–மாநில அரசுகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி
அனிதாவின் சாவுக்கு மத்திய–மாநில அரசுகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே எறையூரில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அரியலூர் மாணவி அனிதாவின் சாவு விரக்தியால் ஏற்பட்ட தற்கொலை முடிவு அல்ல. மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து நடந்திருக்கிற யுத்தம். ‘நீட்’ தேர்வு தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து நடத்திய நாடகத்தின் விளைவாக இந்த பலி நடந்து இருக்கிறது.
தமிழக அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் ஓராண்டுக்கு விலக்கு அளிப்போம் என்று உறுதிஅளித்து விட்டு, பின்னர் அதையும் நிறைவேற்றாமல் துரோகம் செய்து விட்டார்கள். அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல், இணைங்கிபோய் இருக்கிறது. இது ஏமாற்றம் அளிக்கிறது.
டாக்டர் ஆக வேண்டும் என்ற தன்னுடைய கனவு ‘நீட்’ தேர்வால் நொறுங்கி போனதால் அனிதா தன்னைத்தானே மாய்த்து கொண்டிருக்கிறார். இதே போல் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக மத்திய–மாநில அரசுகள் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
அகில இந்திய அளவில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கட்சிசாரா மாணவர்கள் போராட வேண்டும். தோழமை கட்சிகளுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.