மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தி.மு.க.– விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.– விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 373 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-03 01:15 GMT

விழுப்புரம்,

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாணவர் அணி அமைப்பாளர் ஸ்ரீவினோத் தலைமையில் நகர தலைவர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் லெனின் விஜய், ராஜ்குமார், அன்பழகன், முரளி, நகர மாணவர் அணி அமைப்பாளர் விக்ரமன், துணை அமைப்பாளர் பிரபு உள்பட பலர் ஊர்வலமாக சென்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதி செயலாளர் தமிழ்மாறன் தலைமையில் செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, மாநில துணை பொதுச்செயலாளர் சேரலாதன், நகர செயலாளர் இரணியன், தொகுதி துணை செயலாளர் பெரியார், ஒன்றிய செயலாளர் சங்கர் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர்.

மேலும் உளுந்தூர்பேட்டையில் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் பாமரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 41 பேரும், கண்டமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 55 பேரும், திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பேரும், காணையில் ஒன்றிய செயலாளர் அறிவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரும், கோலியனூர் கூட்டுசாலையில் ஒன்றிய செயலாளர் முகிலன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், கச்சிராயப்பாளையம் கூட்டுசாலையில் மாநில செயலாளர் பாசறை பாலு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பேரும், விக்கிரவாண்டியில் ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பேரும், சின்னசேலத்தில் சங்கராபுரம் தொகுதி செயலாளர் அம்பிகாபதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பேரும், செஞ்சியில் நகர செயலாளர் சிவா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 11 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 373 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் கரிகால சோழன் அமைப்பு, பசுமை மீட்பு படை, யாதும் ஊரே யாவரும் கேளீர் பொதுநலச்சங்கம், விழிமா நகர இணையதள நண்பர்கள் ஆகிய அமைப்புகள் சார்பில் மாணவி அனிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ராம.ரவிஅலெக்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரன், மாநில தொழிற்சங்க பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட தலைவர் பாலமுருகன், வக்கீல் அணி செயலாளர் அய்யப்பன், இளைஞரணி செயலாளர் தினேஷ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், அய்யனார், நகர செயலாளர் மோகன், நகர மாணவர் அணி செயலாளர் ராஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தியாகதுருகம் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு கள்ளக்குறிச்சி தொகுதி செயலாளரும், தியாகதுருகம் ஒன்றிய செயலாளருமான மதியழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் பரசுராமன், முருகவேல் ஒன்றிய, நகர நிர்வாகிகள் அம்பேத்கர், சேகர், ரமேஷ், முருகன், சீனு, ஏழுமலை, ஊடக அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வளவனூர் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அருண் தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் வானூர் ஒன்றிய செயலாளர் கந்தன் தலைமையிலும், பட்டானூர் சோதனைச்சாவடி அருகில் மாவட்ட நிர்வாகி பென்னிவளவன் தலைமையிலும், கிளியனூர் பஸ் நிறுத்தம் அருகில் மாவட்ட துணை செயலாளர் இரணியன் தலைமையிலும், கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி தொகுதி செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ரிஷிவந்தியம் தொகுதி செயலாளர் சிலம்பன் தலைமையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் நடராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்